Advertisment

அதிக போதைக்காக பனங்கள்ளில் ஊமத்தங்காய் கலப்பு... போதை வியாபாரிகளின் விபரீதம் முறியடிப்பு...

Umathangai blend in cash for more drugs

சுனாமியாய் தாக்கும் கரோனா 2ஆம் அலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மே 24ஆம் தேதிமுதல் லாக்டவுணை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், 31ஆம் தேதிக்குப் பிறகு தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவித்திருக்கிறார். அதோடு ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகளும் மூடப்படும் என்ற கண்டிப்பான அறிவிப்பின்போது கிடைத்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்ட மது அருந்துவோர், தேவைக்கான மதுபாட்டில்களைப் பெறுவதற்கு அலைமோதினர். ஊரடங்கு காலம் என்பதால் மதுவிற்கு டிமாண்ட் ஆகும் என்ற கணக்கில் மது அருந்துவோர், தேவைக்கும் அதிகமாக வாங்கி சேமித்துக்கொண்டனர்.

Advertisment

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சந்தைப் பேர்வழிகள் டாஸ்மாக்கின் ஊழியர்களோடு கூட்டணி போட்டுக்கொண்டு பெட்டி பெட்டியாக வாங்கிப் பதுக்கினர். ஏனெனில் கள்ளச்சந்தையில் டிமாண்டைப் பொறுத்து விற்கப்படுவதில் லாபத்தில் சரிபாதி என்ற கூட்டணி ஒப்பந்தம்தான் டாஸ்மாக் ஊழியர்கள் பலரை இந்தரூட்டில் செல்ல வைத்திருக்கிறது.

Advertisment

இந்தக் கூட்டணி டீலிங்கெல்லாம் டாஸ்மாக் மேலாளர்கள் அறியாததல்ல. காரணம், கிடைப்பதில் ஒருபங்கு அவர்களுக்கும் போவதால் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே வாய்மூடி மௌனியாகிவிடுவர்.

தற்போது லாக்டவுன் காலம் நீடிக்க நீடிக்க மதுவிற்கான டிமாண்டும் உச்சத்தில் போய்க்கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 150 ரூபாய் அரசின் அசல் விலை கொண்ட குவார்ட்டர் பாட்டில் ஒன்று 800 - 1000 வரை கள்ளச் சந்தையில் போகிறதாம். கட்டுப்படியாகாத இந்த விலை, அப்பாவி ஏழை மது அருந்துவோரைப் பாதிக்க, அவர்களோ போதைத் தன்மை கொண்ட வலிநிவாரணி ஆண்ட்டிபயாட்டிக் மாத்திரைகள், குளோரோஃபார்ம்-2, நைட்ரோ சிதம் போன்ற மாத்திரைகளை லோக்கல் மருந்துக் கடைகளிலிருந்து அதிக விலையில் பெற்றுப் பயன்படுத்துவது தெரியவர, தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகங்கள், மேற்படி வலி நிவாரணிகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றித் தரக்கூடாது என அனைத்து மருந்துக் கடைகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் விளிம்புநிலை மது அருந்துவோர் உள்ளிட்ட பலர் மது கிடைக்காமல் திண்டாடுவதற்கான வாசல்களும் இந்த ரூட்டில் அடைக்கப்பட்டன.

குடித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் நரம்புத் தளர்ச்சியால் துடித்தே தீர வேண்டுமே எனப் பதறுவோர் கள்ளச் சாராயம், கஞ்சா போன்றவற்றை மாற்றாகத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் பரிதவிப்பைப் பயன்படுத்திக்கொண்டு கூசாமல் பணம் பார்க்க முனையும் சிலரோ மாவட்டங்களின் காடுகள், புதர் மண்டிய பகுதிகளில் ஊறல்களையும் போடத் தொடங்கியிருக்கின்றனர். ஏனெனில் லாக்டவுண் நேரம் கள்ளச் சாராய உற்பத்தியாளர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். இதனால் நெல்லை தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் வாகைக்குளம், மானூர், விஸ்வநாதப்பேரி, சிவகிரி போன்ற பகுதிகளில் வடிப்புகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளதற்கு மிகப்பெரிய காரணம் லாக்டவுண் சோதனையில் காவல்துறையினரின் கவனமின்மைதான்.

Umathangai blend in cash for more drugs

போதைசரக்கின் டிமாண்ட்டால் கள்ளச் சந்தை வியாபாரிகளின் போதை வியாபாரமும் விலையும் கள்ளமார்க்கெட்டில் கொடி உயரப் பறக்கிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், ஆராய்ச்சிபட்டி நகரிலுள்ள டாஸ்மாக் கடைகளில் பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அதன் ஊழியர்களின் மூலம் வெளியேற்றப்பட்டு கள்ளச் சந்தை வியாபாரிகளுக்குக் கைமாற்றப்பட்டு, ஐந்து மடங்கிற்கும் மேலான விலையில் விற்கப்படுகின்றன. குறிப்பாக வையக்கவுண்டம்பட்டி, பெரும்பத்தூர், கவுண்டம்பட்டி, கரிவலம் போன்ற பகுதிகளில் குவார்ட்டர் பாட்டல்கள் 800 – 1000 விலையில் விற்கப்படுகின்றன. 70 ரூபாய் மதிப்பிலான 1 லிட்டர் கள்ளச் சாராயத்தின் விலை 200. முக்கியமாக பாண்டிச்சேரியிலிருந்து காய்கறிகள் கொண்டு வரப்படும் வாகனங்களில் கடத்தப்படும் பாண்டிச்சேரி மது, லிட்டர் ஒன்று இரண்டாயிரம் விலையில் விஸ்வநாதபேரி, சிவகிரிப் பகுதிகளில் விற்கப்படுகின்றன என்று சொல்கிற சில நேர்மையான டாஸ்மாக் புள்ளிகளே, மாவட்டத்தின் மூடப்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளைத் தற்போது ரெய்ட் அடித்தால் எத்தனை லட்சங்கள் மதிப்பிலான மதுபாட்டில்கள் வெளியேற்றப்பட்டு விற்பனையில் கோடிகளைச் சுருட்டியது என்பது வெட்ட வெளிச்சமாகும் என்கிறார்கள்.

இப்படிசக்கைபோடு போடுகிற கள்ளச் சந்தையின் அபரிமிதமான லாபமே சில போதை மாஃபியாக்களைக் கொடூரமான விபரீதப் பரிட்சையில் தள்ளியிருப்பது ரத்த நாளங்களை உறைய வைக்கிற விஷயம்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி டி.எஸ்.பி.யான கலைக்கதிரவனும், கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணனின் போலீஸ் டீம், மே 30 அன்று தங்கள் காவல் லிமிட்டில் வருகிற மானங்காத்தான் கிராமத்தின் காட்டுப் பகுதியில் ஒதுக்குப் புறத்திலுள்ள ஒரு தனியார் தோட்டத்தின் கிணற்று மின் மோட்டார் ரூமைச் சோதனையிட்டிருக்கிறார்கள். அங்கு ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய பேரல் ஒன்றின் முழுக்க நுரை படர்ந்திருந்த வடிப்புச் சாராயம் கமகமப்பதை உணர்ந்தவர்கள், தோட்டத்திலிருந்த கணேசன் என்பவரைப் பிடித்துக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததும், கடந்த பத்து தினங்களாக அந்தப் பகுதியிலிருக்கும் பனை மரங்களிலிருந்து இறக்கப்பட்ட கள்ளையும் ஊறல் வடிப்பையும் சேர்த்து மொத்தமாக 240 லிட்டர் சேமித்து வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நெல்லை மாவட்டத்தின் மானூர் பகுதியின் வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்த கணேசன் அன்றாடம் இப்படிச் சேமிப்பதிலேயே கவனமாக இருந்திருக்கிறார்.

இப்படி ஒரு வாரத்திற்கும் மேலாக ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த அதன் வாசனை வயிற்றைக் குமட்டுமளவுக்கு வாடை கிளம்புவதைக் கண்டு சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர் மணிவண்ணனின் டீம், பேரல்களிலும் பிளாஸ்டிக் வாளிகளிலும் வைக்கப்பட்டிருந்த 240 லிட்டர்களையும் வெளியில் கொட்டி அழித்திருக்கிறார்கள். அப்போது படர்ந்த கள் ஊறல் வடிப்புகள்பட்டு தரையில் படர்ந்திருந்த செடிகளைக் கருக்கியது கண்டு சந்தேகப்பட்டவர்கள், கணேசனிடம் கடுமையாக விசாரித்தபோது,சேமித்து வைக்கப்பட்ட கள்ளுடன் அதிக போதை தரும் ஊமத்தங்காயையும் சேர்த்ததால் நுரைதள்ளி இப்படி ஆகியிருக்கிறது. 70 ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் கள்ளை 200 ரூபாய்க்கு விற்பதற்குத் திட்டமிட்டிருப்பதையும் சொல்லியிருக்கிறார்.

அதையடுத்தே சேர்க்கப்பட்ட ஊமத்தங்காய் கலந்த கள் ஸ்டாக் வைக்கப்பட்டதில் விஷத்தன்மையாய் மாறியதால் அழிப்பின்போது செடிகளைக் கருக்கியது தெரியவர, இதுவே கள்ளத்தனமாக, மது அருந்துவோருக்கு விற்கப்பட்டிருந்தால் ஆள் காலியாகிவிடுவார்களே. நிலைமை படுமோசமாகியிருக்கமே என விபரீதத்தை உணர்ந்த போலீஸ் படையினர் உறைந்தே போனார்கள்.

உயர் போதைக்காக பனங்கள்ளில் ஊமத்தங்காய் சேர்ப்பதைப் பற்றி மதுவிலக்குப் பிரிவின் அனுபவம் கொண்ட அந்த உயரதிகாரியிடம் நாம் பேசிய போது. “அதிர்ஷ்டவசமாக கள்ளில் கலந்த ஊமத்தங்காய் பேரலைப் போலீஸார் சரியான நேரத்தில் தடுத்து அழித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்” என்று பதைபதைப்போடு கலப்பு பற்றிய சில விஷயங்களையும் தெரிவித்தார்.

“அண்மையில் பெய்த கோடைத் தொடர் மழையினால் காட்டுப்புறங்களில் ஊமத்தங்காய் செடிகள் பார்த்தீனியச் செடிகள் போன்று படர்ந்து விளைந்து கிடைப்பது சகஜம்.முள் எலி போன்ற முட்கள் சைசில் அதிகளவில் ஊமத்தங்காய்கள் காய்த்திருக்கும். இந்த ஊமத்தங்காய்களைப் பறித்துப் பிளந்தால் அதில் கசப்புத் தன்மை கொண்ட பால் வடியும். அது ஒருவிதமான கிறக்கத்தன்மையை ஏற்படுத்தும் குணம் கொண்டாலும் விஷத்தன்மையுடையது.

சாதாரண பதனீரில் ஊமத்தங்காயின் பாலைக் கலந்தால் உடனே நுரை பொங்கும். ஒருவித போதை ஏறும். கை தேர்ந்த புள்ளிகள் அதனை ஒரு லிமிட்டாகச் சேர்ப்பார்கள். அளவு கூடிவிட்டால் கடும் விஷமாக மாறிவிடும் தன்மை கொண்டது. இதனையே ஒரு லிமிட் கணக்கில் கள்ளில் சேர்ந்தாலும் கள் போதையுடன் ஊமத்தங்காய் போதையும் சேர அதிக போதை கிடைக்கும். பணம் பார்க்கும் வியாபார நோக்கத்திலும், தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி இதுபோன்ற ஊமத்தங்காய் கலவைக் கலப்பு கள் பயன்படுத்துவது கொடூர விஷப் பரீட்சையாகும்.

உடனே கலக்கப்படும் இந்தச் சரக்கை வாங்குபவர்கள் உடனே அருந்தினாலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒருவேளை மது அருந்துவோர் விபரம் தெரியாமல் ஸ்டாக் வைத்துப் பின் அருந்தினால் கூட விஷமாக மாறும். அது உட்கொள்பவரின் உயிரைப் பறித்துவிடும். அதேபோன்று ஊமத்தங்காய் கலந்த கள் சரக்கினை விற்பவர்கள் ஸ்டாக் வைத்திருந்தாலும் 24 மணிநேரத்தில் அது விஷமாக மாறிவிடும் குணம் கொண்டது.

ஒருவேளை அது பலருக்கு விற்கப்படுமேயானால் உயிர்பலிகள் ஏற்பட்டு நிலைமை அல்லோலகல்லோகப்பட்டுவிடும். ஏரியாவே பற்றி எரிந்துவிடுமே. நல்லவேளை, இந்தக் கொடூரம் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டிருக்கு” என்றார் குரல் பதற.

பேரழிவை ஏற்படுத்துகிற ஊமத்தங்காய் கலப்பு கள்ளைக் கைப்பற்றி அழித்த கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணனின் போலீஸ் டீமை பாராட்டிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் நாம் பேசினோம்.

Umathangai blend in cash for more drugs

“லாக்டவுண் காலம். போலீசின் கவனம் அதிலிருந்தாலும், நான் தினமும் கள்ளமது, கள்ளச்சாராய ரெய்ட் பற்றியதையும் மைக்கில் அனைத்துக் காவல் நிலையங்களையும் எச்சரித்துக்கொண்டேயிருப்பேன். ஏதாவது விபரீதம் நடந்துவிடக் கூடாதல்லவா. அதன் பலன்தான் கயத்தாறு போலீஸ் டீம் சரியான நேரத்தில் தாமதமில்லாமல் கைப்பற்றி அழித்திருக்கிறார்கள். விளைவுகளும் தடுக்கப்பட்டுள்ளன பாராட்டுக்குரியது” என்றார் நிம்மதியான குரலில்.

அண்மையில்தான் உ.பி.யில் விஷ சாராயமருந்தியதால் 29 உயிர்கள் பறிபோய் உ.பி.யே பற்றி எரிந்திருக்கிறது. அதுபோன்றதொரு சம்பவம் தென்மாவட்டத்திலும் நடக்காமல் காவல்துறையினரால் சரியான நேரத்தில் தடுக்கப்பட்டது ஆகப் பெரிய விஷயம்.

lock down corona virus nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe