Skip to main content

முன்னாள் மேயர் கொலையில் வலுக்கும் சந்தேகங்கள்..?

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

         முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலைகள் நடந்து ஐந்து நாட்களாகிவிட்டது. தனக்குக் கிடைத்துள்ள தடயங்களை வைத்து குற்றத்திற்கான காரணம்.? குற்றவாளி யார்.? என தனிப்படை அமைத்தும் வழக்கில் இன்னும் முன்னேற்றம் காணவில்லை காவல்துறை..? கடந்த வருடங்களில் தமிழகத்தில் நடந்த அரசியல் கொலைகள் கண்டுபிடிக்கப்படாமலே நீர்த்துப் போனது போல் இந்த வழக்கும் நீர்த்துப் போகுமோ.? என்ற அடிப்படையில் சந்தேகங்களை கேள்விகளாக எழுப்புகின்றனர் பொதுஜனங்கள்.

 

m

 

" அடிப்படை விசாரணையே தவறு.! சட்டம் ஒழுங்கில் பிரச்சனை என்றால் அரசினை நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதால் ஆரம்பத்திலேயே ஆதாயக்கொலை என குற்றப்பிரிவிற்கு வழிக்காட்டியது காவல்துறை. இந்த மூவர் கொலையை பொறுத்தவரை அவர்கள் குடும்பத்திற்கு தெரிந்த, அறிந்த நபரே செய்திருக்க வேண்டுமென்பதும், அது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்திருக்கலாம் என்பதை அங்கு கிடைக்கும் தடயங்கள் முடிவு செய்கின்றன. காம்பவுண்ட் வாசல் கேட்டைத் தாண்டி வரவேற்பறைக்குள் வந்திருக்கின்றனர் அந்தக் கொலையாளிகள். அதற்கு அடையாளமாய் அவர்களுக்குக் கொடுப்பதற்காக அங்கு தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் உள்ளது. அது போக, முன்னாள் அணிந்திருந்த சில நகைகளை மட்டுமே திருடியதாக காவல்துறை கூறுவதும், மோப்ப நாய் மேலப்பாளையம் சாலையை நோக்கி ஓடியதையும் ஒரு சேர பார்த்தால் கொலையாளி ஆதாயக்கொலைகாரன் இல்லை.

 

m

 

ஆதாயக்கொலைகாரன் என்றால் அங்கிருக்கும் பீரோ உள்ளிட்ட மற்றைய இடங்களில் கை வைத்திருக்கலாம். அது போக ஆதாயக்கொலைகாரன் எளிதாக தப்பித்து செல்ல நெடுஞ்சாலை உள்ளிட்ட பாதைகளை மட்டுமே பயன்படுத்துவான். மேலப்பாளையம் செல்லும் பாதை போல் பயன்படுத்தமாட்டான். அவனுடைய செய்கைகளைப் பார்க்கும் போது கொலையாளி கை தேர்ந்தவன்.. திட்டமிட்ட கொலைகாரன். தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு செய்துள்ளான். இதனைக் கண்டுபிடிக்கவேண்டியது காவல்துறையின் பொறுப்பு." என்கிறார் வழக்கறிஞரான பிரம்மா.

 

வழக்கறிஞர் பிரம்மா

a

 

 கொலையின் போது நிர்வாண நிலையிலிருந்த முருகசங்கரனுக்கு 25 வெட்டுக் காயங்களும், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரிக்கு 18 காயங்களும், வேலைக்காரப் பெண் மாரியம்மாளுக்கு 2 காயங்களும் இருந்துள்ளதாக ஆரம்பக்கட்ட தடயவியல் அறிக்கை கூறுகின்றது. வரவேற்பறையில் முன்னாள் மேயரும், பெட்ரூமை நோக்கி மூருகசங்கரனும், சமையலறை முகப்பில் வேலைக்காரப்பெண்ணும் உயிரற்ற சடலமாய் கிடந்திருக்கின்றார்கள்.

 

  மூவர் கொலையில் பணியாற்றும் அதிகாரி ஒருவரோ, " வரவேற்பறையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி குப்புற விழுந்த நிலையில் கிடந்தார். படுக்கையறையிலுள்ள செல்போன்கள் தொடும் தூரத்திலிருக்க, வீணையும் கவிழ்ந்து கிடக்க முருகசங்கரன் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். இதில் கொலையாளி தான் சிக்கிக் கொள்ளக் கூடாது என ரத்தக்கறைப் படிந்த தடயங்களை தண்ணீர் ஊற்றி அழித்திருக்கின்றான்.

 

பல இடங்களில் அவன் தடயங்களை அழிக்க முற்பட்டது தெளிவாக தெரிகின்றது. இருப்பினும் சில தடயங்களை விட்டு சென்றுள்ளான். அதனை நோக்கியும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளோம். எனினும், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி இரத்த வெள்ளத்தில் கொலையுண்டு கிடந்த பொழுது இரு புகைப்படங்கள் உலா வருகின்றது. ஒன்று குப்புற விழுந்து கிடப்பது போல், மற்றொன்று மல்லாந்த நிலையில் திரும்ப கிடத்தப்பட்டது போல்.. இதில் குப்புற விழுந்து கிடக்கும் புகைப்படத்தினை எடுத்து பரவவிட்டது யார்..? என்பது கமிஷனருக்கு குடைச்சலை கொடுத்துள்ளது. அதனை நோக்கியும் விசாரணையை செலுத்தியுள்ளனர். அது போக, முக்கியமான விஷயம் என்னவெனில் 25, 18 என வெட்டுக்காய எண்ணிக்கயில் ஒன்றிரண்டு வெட்டுக்களை தவிர மற்றவைகோடு அளவிலான  சிறிய காயங்களே.!!! எனினும் விரைவில் குற்றவாளியை நெருங்கிவிட்டோம்" என்கின்றார் விட்டேத்தியாய்.!!

சார்ந்த செய்திகள்