police

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கீரி மாத்தம்மன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடுபோனது. இது சம்பந்தமாக உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 வயது விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரை கடந்த 3ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் குற்றவாளி விஜயகுமார் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்தது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் திருடியது உட்பட இவர் மீது ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

இவரது தொடரும் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் குண்டர் சட்டத்தில் அடைக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா உத்தரவின் பேரில் விஜயகுமார் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்