UGC has announced courses offered Periyar University Distance Education Program not valid

Advertisment

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின்தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் படிப்புகள் செல்லாது எனவும், அத்திட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் யுஜிசி அறிவித்துள்ளது.

சேலத்தை அடுத்துள்ள கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் தனியார் என 125க்கும் மேற்பட்ட கலைக்கல்லூரிகள் இந்தப் பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன.

இந்தப் பல்கலைக்கழகத்தில், 'பிரைடு' என்ற பெயரில் தொலைதூரக் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் இந்த திட்டத்தின் மூலம் வருவாயும் கிடைத்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின்தொலைநிலை கல்வித்திட்டத்தில் வழங்கப்படும் எந்த ஒரு படிப்பும் செல்லாது என்றும், தொலைநிலைக் கல்வித்திட்டத்திற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் பல்கலைக்கழகமானியக்குழு (யுஜிசி) திடீரென்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரியார் பல்கலையில் கடந்த 2007 - 2008 கல்வி ஆண்டு முதல் 2014 - 2015 ல்வி ஆண்டு வரையிலும், அதையடுத்து 2019 - 2020 கல்வி ஆண்டிற்கும் தொலைதூர கல்வித்திட்டத்தில் பட்டப்படிப்புகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. தொலைதூர கல்வித்திட்டத்திற்கென முழு நேர இயக்குநர் இல்லாதது, போதிய முழுநேர பேராசிரியர்கள் இல்லாதது, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான படிப்பு மையங்கள் அமைக்கப்படாதது தொடர்பாக பெரியார் பல்கலை மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக யுஜிசியின் புகார் மறுசீரமைப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டதன் பேரில் சில பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2022 - 2024 வரை எந்த ஒரு உயர்கல்வி நிறுவனங்களின் விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.அதேபோல், ஏற்கனவே 2021 - 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படவில்லை. பெரியார் பல்கலைக்கழகத்தின்மீதான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் அனைத்தும் தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

மேலும், பெரியார் பல்கலை தொலைதூரக் கல்வித்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எந்த ஒரு படிப்பிலும் மாணவர்கள் சேர வேண்டாம். பல்கலையின் தொலைதூரக் கல்வித்திட்டத்திற்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத படிப்புகளில் சேர்வதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.