
உலக மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று அவர்களுக்காக அமைக்கப்பட்ட பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''உலக மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று அவர்களுக்கென அமைக்கப்பட்ட பூங்காவில் மாணவர்களோடு சேர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் சில கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். நான், சென்னை மேயர், அமைச்சர் என அனைவரும் கலந்து கொண்டோம். அவர்களுடைய கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் சென்று அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுப்போம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை அமைக்கப்பட்டது போல் எல்லா கடற்கரைகளிலும் அமைக்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ''கண்டிப்பாக அமைப்போம்'' என்றார்.
அப்பொழுது மற்றொரு செய்தியாளர் 'திராவிட மாடலுக்கான வியூகத்தை கொண்டு வந்தது நாங்கள்தான் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே?' எனக்கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ''அப்படியா...'' என்றார். இதுகுறித்து உங்கள் பார்வை என்ன என செய்தியாளர் விடாப்பிடியாக கேட்க ''நல்லா இருக்கு'' என்று பதிலளித்து சிரித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
Follow Us