
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி ஸ்கார்பியன்ஸ் புட்பால் கிளப் சார்பாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் கேரள மாநில கால்பந்தை வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை திண்டுக்கல் டி.எஸ்.பி.கார்த்திக், ஒய்வு பெற்ற டி.எஸ். பி. வசந்தன், பங்குத் தந்தை பெர்னாட்ஷா ஆகியோர் துவக்கி வைத்தனர். 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் இரவு பகலாக நடைபெற்ற போட்டிகளில் 27 அணிகள் கலந்து கொண்டன.
நிறைவு நாள் விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு இறுதிப் போட்டியைத் துவக்கி வைத்தார். இதில் மேட்டுப்பட்டி எஸ்.டி, எஸ்.ஏ அணியும், என். பஞ்சம்பட்டி ஸ்கார்பியன்ஸ் புட்பால் கிளப் அணியும் மோதின. இதில் மேட்டுப்பட்டி எஸ்.டி, எஸ்.ஏ அணி முதல் பரிசையும் என். பஞ்சம்பட்டி ஸ்கார்பியன்ஸ் புட்பால் கிளப் அணி இரண்டாம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினர்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இன்று விளையாட்டுத் துறை மேம்பட்டு வருகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். தமிழக விளையாட்டுத் துறையை அவர் மேம்படுத்தியது மட்டுமின்றி உலகளவில் தமிழகத்தை பேச வைத்துள்ளார். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது மூலம் கிராமப்புற விளையாட்டு வீரர்களும் தேசிய அளவில் சாதனை படைத்து வருகிறார்கள். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தைச் சீரமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இந்த மை தானம் கேலரி வசதியுடன் புதுப்பிக்க கொடுக்கப்படும்.

இது தவிர ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சீவல் சரகு ஊராட்சியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் கால்பந்து மட்டுமின்றி தடகளம், கூடைப் பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, கபடி வீரர்களும் பயன்பெறுவார்கள்” என்று கூறினார். அதன் பின்னர் முதல்பரிசை பெற்ற மேட்டுப்பட்டி எஸ்.டி, எஸ்.ஏ அணிக்கும் இரண்டாம் பரிசை பெற்ற என்.பஞ்சம் பட்டி ஸ்கார்பியன்ஸ் புட்பால் கிளப் அணிக்கும் மற்றும் மூன்று மற்றும் நான்காம் பரிசை பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையுடன் ரொக்கப்பரிசும் வழங்கி பாராட்டினார். நடுவர்களாக செயல்பட்டவர்களுக்கும் நினைவுப் பரிசை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர் பிள்ளையார் நத்தம் முருகேசன், திமுக நிர்வாகி அம்பை ரவி, திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், இளைஞரணி அமைப்பாளர் ராஜகணேஷ், அரசு ஒப்பந்தக்காரர்கள் ஜீசஸ்.அகஸ்டின், மெல்வின், விக்னேஷ்வரன், ஒன்றிய துணை செயலாளர் வசந்தா கென்னடி, முன்னாள் ஊராட்சி செயலாளர் கென்னடி, கிளை செயலாளர் தாஸ் வேளாங்கண்ணி, மற்றும் ஸ்கார்பியன்ஸ் புட்பால் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.