Skip to main content

உதயச்சந்திரன் பணி மாற்றம் நீதிமன்ற அவமதிப்பாகும்! - கே.பாலகிருஷ்ணன்

Published on 26/08/2018 | Edited on 26/08/2018
udhayachandran


உதயசந்திரன் பணி மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பாடத்திட்ட செயலாளராக தொடர அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய த.உதயச்சந்திரன், அத்துறையின் பாடத்திட்ட செயலாளராக மட்டும் பணியாற்றுமாறு மாற்றப்பட்டார். இந்நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்தும் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார் செய்யும் அளவுக்கு பாடத்திட்டக்குழு பணியாற்றி வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்தப்பணியின் காரணமாக 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் உள்பட மற்ற வகுப்புகளுக்கான பாட நூல்கள் இனிமேல்தான் தயாரிக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக தமிழக பள்ளி பாடநூல்கள் தற்காலப்படுத்தப்படாத நிலையில் இதுவொரு நல்ல முயற்சியாக நடந்து வந்தது. இந்நிலையில் த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டிருப்பது இம்முயற்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகும்.

பாடநூல் தயாரிப்பு பணி முடியும் வரை த.உதயச்சந்திரனை அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் பணி மாற்றம் செய்யப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே அவரது பணி மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பாடத்திட்ட செயலாளராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்