Skip to main content

வேங்கைவயலில் மனிதக்கழிவு கலந்த தண்ணீர் தொட்டியை உடைக்க புறப்பட்ட டைஃபி - வழியில் கைது

Published on 21/01/2023 | Edited on 22/01/2023

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த மாதம் 26ந் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஏடிஎஸ்பி ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு விசாரணைக்கு அமைக்கப்பட்டு, 85 சாட்சிகளிடம் முதற்கட்ட விசாரணை முடிந்து, 7 பேருக்கு சம்மன் கொடுத்து விசாரிக்கப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட மக்களிடமே விசாரணை நடப்பதாகக் கூறி விசாரணை அமைப்பை மாற்ற வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு வேங்கைவயல் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது.

 

சிபிசிஐடி திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், விசாரணை எப்படி நடக்கிறது என்பதை ஆய்வுசெய்ய எஸ்.பி தில்லை நடராஜன் நேற்று வெள்ளிக்கிழமை வந்தார். விசாரணை குழுவினரிடம் விசாரணை பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தவர், மேலும் எவ்வாறு விசாரணை செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார். அப்போது தனிப்படையினர் சிலர், வேங்கைவயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்வதால் நமது விசாரணைக்கு இடையூறாக உள்ளது. அதனால் விசாரணை முடியும் வரை வெளியாட்கள் வருவதைத் தவிர்த்தால் வேகமாக விசாரணை செய்யலாம் என்று கூறியுள்ளனர்.

 

இந்த நிலையில், இன்று சனிக்கிழமை வேங்கைவயலில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடைக்கும் போராட்டத்தை டைஃபி (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) சார்பில் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள் என்பதால் மாவட்ட எல்லையான புளிச்சங்காடு கைகாட்டி முதல் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டது. அதேபோல வேங்கைவயல் செல்லும் வழியில் 4 கி.மீ. முன்னதாக சத்தியமங்கலத்தில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

திட்டமிட்டபடியே டைஃபி மாநிலத் தலைவர் கார்த்திக், செயலாளர் சிங்காரவேலன், பொருளாளர் பாரதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கொடியேந்தி கோஷங்கள் எழுப்பிக்கொண்டே ஊர்வலமாகச் சென்றனர். சத்தியமங்கலத்தில் தடுப்புகளை அமைத்து காத்திருந்த போலீசார் ஊர்வலக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் முக்கிய சாட்சியான தண்ணீர் தொட்டி வழக்கு விசாரணை முடியும் வரை அப்படியே இருக்க வேண்டும். விசாரணை முடிந்தவுடன் அது அகற்றப்படும். மேலும், விரைவில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்த பிறகு தண்ணீர் தொட்டி இடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து யாரும் வேங்கைவயல் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்