புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமாகக் கொலை, கொள்ளை, வழிப்பறி எனக் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு  நாள் அதிகரித்து வருவது பொதுமக்களைக் கவலையடைய வைத்துள்ளது. இன்று ஆலங்குடி காவல் சரகத்தில் மட்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன் மகன் ரஞ்சித் (வயது 24) டாடா ஏஜ் வாகன ஓட்டுநர். இன்று இரவு ஆலங்குடி பாத்தம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய போது அங்குத் தயாராக நின்ற 4 பேர் கொண்ட கும்பல் ரஞ்சித்தைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்து தலையை வெட்டி குதறிப்போட்டுவிட்டு 2 பைக்குகளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

Advertisment

தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலிசார் ரஞ்சித் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகள் யார் என்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதே போல இதே ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட வன்னியன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சுப்புக்கண்ணு இவரது மகன் ராமதாஸ் (வயது 31). சுப்புக்கண்ணு அரையப்பட்டி பகுதியில் மரப்பட்டறை வைத்து தச்சுத் தொழில் செய்து வருகிறார். தனது மகன் ராமதாஸை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு வேலை செய்யாமல் சில மாதங்களிலேயே சொந்த ஊருக்குத் திரும்பி வந்து மது போதையில் இருந்துள்ளார். 

தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்று நேற்று இரவு தனது தந்தையின் மரப்பட்டறைக்குச் சென்று பொருட்களை உடைத்தவர் தந்தையையும் தாக்கிய போது தந்தை சுப்புக்கண்ணு மகன் ராமதாஸ் மீது மரச்சட்டத்தால் தாக்கியதில் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடி போதையில் தகராறு செய்த மகனைக் கொன்ற தந்தை சுப்புக்கண்ணுவை ஆலங்குடி போலிசார் கைது செய்துள்ளனர். ஆலங்குடி காவல் சரகத்திற்குள் ஒரே நாளில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.