/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_41.jpg)
கோவை நொய்யல் ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.மூன்று மணிநேரத் தேடுதலுக்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
கோவை பாப்பநாயக்கன் புதூர், இந்திரா நகர்ப் பகுதியில் வசித்துவரும் நாகராஜன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (31), இதே பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் பிரபாகரன் (29) ஆகிய இருவரும் நண்பர்கள். தமிழ்ச்செல்வன் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். பிரபாகரன் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்தார்.
நண்பர்களான இருவரும் தமிழ்ச்செல்வனின் பிறந்தநாளான இன்று கோவிலுக்குச் சென்றுவிட்டு மாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சித்திரைச்சாவடி அணை பகுதிக்குச் சென்றனர். கைகாட்டி பாலத்தின் கீழ் ஆற்றில் இறங்கிய இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வன் 20 அடி ஆழச்சேற்றில் சிக்கிக் கொண்டார்.
இதனால் பதற்றமடைந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனை மீட்கமுயற்சி செய்தபோது, நீரில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கும், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்கும் முயற்சியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி இருவரது உடல்களையும் சடலமாக மீட்டனர்.
பின் அவர்களது உடல்களை தீயணைப்புத் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)