Two youth arrested for person passes away case

Advertisment

நாமக்கல் அருகே, மது புட்டி தராததால் ஆத்திரத்தில் உணவகத் தொழிலாளியை இளைஞர்கள் இருவர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தவர் கண்ணன் (45). இவர், கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து நாமக்கல்லில் தங்கி, உணவகத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், ஜூன் 15ம் தேதி இரவு வழக்கம்போல் வேலை முடிந்து கிளம்பிய கண்ணன் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பீர் மதுபான புட்டியை வாங்கியுள்ளார். இரவு 11 மணியளவில், கண்ணன் அந்த மதுபான புட்டியுடன் திருச்செங்கோடு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம், தன்னையும் வாகனத்தில் ஏற்றிச்செல்லுமாறு உதவி கேட்டுள்ளார்.

Advertisment

அவர்களும் கண்ணனை ஏற்றிக்கொண்டு நல்லிபாளையம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், கண்ணன் வைத்திருந்த மது புட்டியை பறித்துக் கொண்டார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன் கண்ணனை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச் சென்று, கல்லால் தாக்கியுள்ளனர். அதே கல்லால் முகத்தைச் சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சடலத்தை மீட்ட நாமக்கல் காவல்துறையினர், சடலத்தின் சட்டைப் பையில் இருந்த அலைபேசியை வைத்துத்தான் கொலையுண்ட நபர் பெயர் கண்ணன் என்பதும், அவருடைய குடும்பப் பின்னணியும் தெரிந்து கொண்டனர். சடலம் கிடந்த இடம் ஆள் நடமாட்டமோ, கண்காணிப்பு கேமராக்களோ இல்லாத பகுதி என்பதால் உடனடியாக கொலையாளிகள் பற்றியும், கொலைக்கான காரணம் பற்றியும் தெரிய வரவில்லை.

இதையடுத்து சம்பவத்தன்று திருச்செங்கோடு சாலையில் வழிநெடுக உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோதுதான், கண்ணனை இருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்வது தெரியவந்தது.

Advertisment

அந்தப் பதிவில் உள்ள முகங்களை வைத்து காவல்துறையினர் கொலையாளிகளைக் கண்டுபிடித்தனர். கண்ணனை கொலை செய்ததாக, நாமக்கல் ராமாவரம் புதூரைச் சேர்ந்த பாஸ்கர் மகன் சக்திவேல் (22), சேந்தமங்கலம் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுதம் (28) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள், இருசக்கர வாகன மெக்கானிக்குகளாக உள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.