/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4532.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே சின்னவேப்பம்பட்டு குல்லாய் வட்டத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் சக்திவேல்( 24). இவர் அந்தப் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சக்திவேல் நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்து வெளியே புறப்பட்டுள்ளார். ஆனால், வெளியே சென்ற சக்திவேல் வெகு நேரமாகியும் கடைக்குத்திரும்பி வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரைத்தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையின் அருகில் உள்ள மரத்தில் சக்திவேல் தூக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேல் குடும்பத்தினர் இது குறித்து வாணியம்பாடி காவல்நிலையத்திற்குத்தகவல் தெரிவித்தனர். இந்தத்தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர், சக்திவேலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வாணியம்பாடி காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட சக்திவேல் அதே ஊரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இருவரும் அண்ணன் - தங்கை உறவுமுறை என்பதால் அவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோர் அந்த இளம்பெண்ணைத்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
காதலனைப் பிரித்து விட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்ததை எண்ணி அந்த இளம்பெண் சில நாட்களாகவே வேதனையுடன் இருந்துள்ளார். இதனிடையில், கடந்த 27 ஆம் தேதி அன்று அந்த இளம்பெண் துக்கம் தாங்காமல் தனது கணவரின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையறிந்து மிகுந்த வேதனையில் இருந்தசக்திவேல் நேற்று மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)