
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தின் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவருக்கு ஜெகதீஸ்வரி எனும் பெண்ணுடன் திருமணம் நடந்து இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் திருமூர்த்தி என்ற ஒரு ஆண் குழந்தை இருந்தது. குருமூர்த்தி பெங்களூருவில் ஆட்டோ ஓட்டிவந்தார். தற்போது அவருக்கு விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், இவரது குழந்தை திருமூர்த்தி, கடந்த 17ஆம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் வீட்டுக்கு முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து திருமூர்த்தியை தேடிய போது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் ஊர் முழுக்க தேடினர். எங்கும் சிறுவன் கிடைக்காததால் அவர்கள், திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அந்த பாக்ஸை திறந்து பார்த்தபோது, அதில், குழந்தை சடலமாக இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில் குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கொலை செய்து ஸ்பீக்கர் பெட்டியில் வைத்ததை ராஜேஷ் ஒப்புக்கொண்டார்.

போலீஸாரின் தொடர் விசாரணையில் ராஜேஷ், தனது அண்ணி ஜெகதீஸ்வரியை தனது ஆசைக்கு இணங்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததோடு, ராஜேஷை அடித்துள்ளார். அதன் பிறகு ராஜேஷுடன் பேசுவதையும் அவர் நிறுத்தியுள்ளார்.
தன் ஆசைக்கு இணங்காத அண்ணியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திருமூர்த்தியின் வாயை பொத்தி, கழுத்தை இறுக்கி, தலையை சுவற்றில் மோதி கொலை செய்து ஸ்பீக்கர் பாக்ஸில் மறைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருப்பாலபந்தல் போலீஸார் ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.