/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-ins-art_11.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தெப்பம் வனப்பகுதியில் இருந்த இருந்த காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் இடங்களில் சுற்றி வந்துள்ளது. இந்த யானை நேற்று முன்தினம் அதிகாலை தேன்கனிக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சுற்றி வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.
இந்த சூழலில் இந்த ஒற்றை காட்டு யானை அன்னியாலம் கிராம பகுதியில் சுற்றி வந்துள்ளது. இந்நிலையில் அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி வசந்தம்மா வழக்கம் போல் கூலி வேலைக்காக தோட்டம் ஒன்றின் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு காட்டு யானை இருப்பதை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் காட்டுயானை அவரை பலமாக தாக்கியுள்ளது. இதில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஸ்வத்தம்மா என்பவரையும் இந்த ஒற்றை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் அஸ்வத்தம்மாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காட்டு யானை தாக்கி இரண்டு பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)