Skip to main content

ஒன்றுக்கு ரெண்டு பொண்டாட்டி ... என்ன வாழ்க்கை? ஓடிப் போயிட்டாங்க... கைதுக்கு முன்பு போலீசிடம் புலம்புல்...


 

நான்கு நடைமேடை கொண்ட முக்கிய ரயில் நிலையம் மேற்கே திருப்பூர், கோவை, வெளி மாநிலமான கேரளா செல்லவும், கிழக்கு பகுதியில் சென்னை, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும் மற்றொரு பாதை மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு செல்லும் வழியாக என நாள் ஒன்றுக்கு சுமார் நூறு ரயில்கள் இங்கு நின்று பிறகு குடிநீர் ஏற்றுதல், பராமரிப்பு வேலைகள் இருந்தால் அவற்றை சரி செய்து பிறகு ரயில்கள் கிளம்பும் சந்திப்பு தான் ஈரோடு ரயில் நிலையம். 
 

நேற்று 3ந் தேதி மாலை சுமார் 04.15 மணிக்கு சென்னை மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பரபரப்பும், பதட்டமாகவும் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. ஆம், ஈரோடு இரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் தான் அந்த தகவல்.

 

erode


 

மேலும் போனில் பேசிய நபர், ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதக் குழு தளபதி ஒருவர் அனுப்பி இருப்பதாகவும், முடிந்தால் மக்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். இதனால் பதட்டமடைந்த ஈரோடு போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழு, மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் ஈரோடு இரயில் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு நின்ற ரயில்கள், பிறகு வந்த ரயில்கள் எஞ்சின் முதல் கழிவறை வரையிலும் பயணிகள் உடமைகள் நடைமேடைகளில் ரயில் பயணத்திற்காக காத்திருந்த மக்கள், கடைகள், ரயில்வே அலுவலகங்கள் என ஒவ்வொரு இடங்களிலும் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு உள்ளதா என கடுமையாக சோதனையிட்டு ஆராய்ந்து பார்த்தனர்.


 

 

ஒரு மணி நேரமாக மக்கள் பதைபதைப்புடன் இருந்தனர். ஈரோடு முழுக்க வெடிகுண்டு செய்தி வேகமாக பரவியது. ஆனால் அங்கு எவ்வித வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை தெரிந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் அழைப்பை போலீசார் ஆய்வு செய்ததில், மேற்கண்ட போன் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் அந்த போன் நெம்பரை பயன்படுத்தி வந்ததும், அந்த போன் வாங்குவதற்கு அவரது உறவினர் சிவகுமார் என்பவர் உதவியுள்ளதாகவும் போலீசுக்கு தெரிய வந்தது.
 

அவர்களை கொண்டு வந்து விசாரணை செய்ததில் லிங்கராஜ் சென்ற 1ந் தேதி  இரவு குடிபோதையில் போனை தொலைத்து விட்டதாக கூற, அதன் பிறகு யார் இந்த போனை பயன்படுத்தினார்கள் என தேடினார்கள். செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில் அதே ரயில் நிலைய டவர் வளாகத்திற்குள் ஒரு நபர் போனை உபயோகப்படுத்தி வருவது தெரிந்தது. போலீசார் விடாமல் துரத்த சந்தோஷ் என்ற பெயர் உள்ளவன் என தெரியவந்தது. மேற்கண்ட நபரின் அங்க அடையாளங்கள், உடை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சேகரித்து தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு மறைவான இடத்தில் சந்தோஷ் படுத்திருந்தான்.
 

தூங்கிக் கொண்டிருந்தவனை போலீஸ் எழுப்பி விசாரிக்க "வாங்கைய்யா வாங்க... நீங்க வருவீங்கனு எனக்கு நல்லா தெரியும்" என மிக சாதாரணமாக சந்தோஷ் கூறியிருக்கிறான். பிறகு எனக்கு சாப்பாடு வேண்டும் என சந்தோஷ் கேட்க, போலீசார் சாப்பாடு கொடுத்து, ''சொல்லுப்பா... ஏப்பா இப்படி அலைய விட்டு அநியாயம் பன்னுனே'' என கேட்டுள்ளனர்.


 

 

''ஐயா எனக்கு 41 வயது. எங்கப்பா பெயரு ரங்கராஜன், மேட்டுப்பாளையம் தான் எனது ஊரு, என் கதைய கொஞ்சம் பொறுமையா கேளுங்க. எனக்கு ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டிங்க, ஆமாங்க முதபொண்டாட்டி கல்யாணமாகி ஒரே வருடத்துல எதுத்தவூட்டுல கல்யாணமாகாத 35 வயசு வாலிபன் ஒருவனுடன் பழக்கமாகி ரெண்டு பேரும் என்னைய விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்புறம் ஒரு வருசமா தேடுனே பொண்டாட்டிய கண்டுபிடிக்கவே முடியலே. அப்புறமா நாமும் புதுப் பொண்டாட்டி கட்டிக்கலாம்னு பொன்னு பாத்து ரெண்டாவதா ஒருத்திய கல்யாணம் பண்ணி முடிச்சேன். அவளும் ஒரு வருசம் தான் என்னோட வாழ்ந்தா அவ வேலைக்கு போன இடத்துல ஒருத்தன் கூட கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடைசில என்ன விட்டுட்டு அவங்கோட ஓடிப் போயி நல்லதொடர்பு ஏற்படுத்திக்கிட்டா. இரண்டு திருமணமும் எனக்கு பெயிலியர் ஆகிப் போச்சு. மனைவிகள் மற்றவர்களுடன் ஓடிவிட்டதால என்ன செய்ய முடியும்னு நான் மனமுடைந்து கெடந்தேன். ஏற்கனவே ஒரு முறை வீட்டைவிட்டு சென்று பத்து நாட்கள் வெளியூர்ல இருந்தேன் இப்போது சிறுமுகை அருகே உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தேன் அங்கே வேலை அதிகமாக இருந்ததால் வேலை செய்யபிடிக்காமல் மனஉளைச்சலில் வீட்டை விட்டு நான்கு நாட்களுக்கு முன்பே வந்துட்டேன், சாப்பிட வழியில்லே அப்போதுதான் ஒரு யோசனை வந்துது ஜெயிலுக்கு போனால் மூணு வேலை சாப்பாடு கிடைக்கும்னு அந்த எண்ணத்தில் தான் கீழே கெடந்த இந்த செல்போன் மூலம்  100 எண்ணுக்கு ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து, பாம் வைத்து இருப்பதாக போன் செய்தேன். போலீஸ் என்னை பிடிப்பீங்கனு எனக்கு நல்லா தெரியுமுங்க... பொண்டாட்டிகளும் இல்லே இன்னொரு பொண்டாட்டி கட்டினாலும் அவளும் இன்னொருத்தன் கூட ஓடிப் போயிடுவா... வாழ்க்கையே வெறுத்துப் போச்சுங்க...." என விரக்தியுடன் சந்தோஷ் பேச, கூட்டிச் சென்ற போலீசார் சந்தோஷ் எதிர்பார்த்தது போல "மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் நோக்கில் குற்றம் செய்யும் எண்ணத்துடன் செயல்பட்ட காரணத்திற்காக " என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர் பிறகு  நீதிமன்றம் சென்று சிறை வரை உடன் சென்று ஜெயிலுக்குள் அனுப்பி வைத்தனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்