two wheeler police arrested in chidambaram

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடுபோவது தொடர் கதையாகியுள்ளது. இந்த நிலையில் வல்லம்படுகை பகுதியைச் சேர்ந்த சரவணன் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடுபோனது.

Advertisment

இதுகுறித்து அவர்கள் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கணபதி, லட்சுமிராமன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் துரை, ரவி மற்றும் காவலர்கள் தனித்தனியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வல்லம்படுகை சோதனைச்சாவடி அருகே சீர்காழியைச் சேர்ந்த இலக்கியன் (24) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக கூறினார். துருவி துருவி விசாரணை செய்ததில் வாகனத்தை வல்லம்படுகை சரவணன் வீட்டு முன்பாக திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.

Advertisment

அதேபோன்று அம்மாபேட்டை அருகில் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தணிக்கை செய்த போது அதில் வந்த இரண்டு நபர்கள் ஆவணங்களை காட்டாமல் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அவர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை செய்ததில் வாகனத்தை ஓட்டியவர் பூம்புகாரைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) என்பதும், பின்னால் அமர்ந்து வந்தவர் மயிலாடுதுறைதிருவெண்காடுவைச் சேர்ந்த பிரபு (வயது 28) என்பதும் தெரிய வந்தது. இருவரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிதம்பரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.