
சென்னை வியாசர்பாடியில் இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரியின் மகன் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 19- ஆம் தேதி அன்று மெரினா கடற்கரை சாலை மற்றும் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள் தொடர்பான வீடியோ வெளியானது. இது தொடர்பாக, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 21- ஆம் தேதி அன்று வியாசர்பாடி அருகே சிலர் இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டது தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் தெரிய வந்தது. தங்களை முடிந்தால் பிடித்து பாருங்கள் என இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் சவால் விடுக்கும் வகையில், பதிவிட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.
இதன் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில், தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் தனசேகரன் என்பவரின் மகன் டிவின் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைதாகி வருவதால், சிறிது நாட்கள் யாரும் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என இன்ஸ்டாகிராமில் சிலர் பதிவு செய்துள்ளனர். அவர்களை கண்டறியும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.