Skip to main content

ரூ. 2000 நோட்டுகள்; அதிர்ச்சி அளித்த நெல்லை போக்குவரத்து கழகம்! 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

two thousand note issue tnstc tirunelveli managing director circular issue 

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்ற அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்துநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறும் முடிவை அறிவித்து உள்ளது. இருப்பினும் 2 ஆயிரம் ரூபாய்  நோட்டுகள் சட்டப்பூர்வமான இருக்கும். மேலும் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம்தேதி வரை வங்கிகளில் இந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வங்கியில் ஒருவர் மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

two thousand note issue tnstc tirunelveli managing director circular issue 
கோப்பு படம்

இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே  23 ஆம் தேதி முதல் நடத்துநர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எடுத்துக் கூறி பயணிகளிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் டிக்கெட் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக பொது மேலாளர்கள், அனைத்து கிளை மேலாளர்கள் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துநர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம் - சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tirunelveli CPM Office incident CM explanation in the 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13-6-2024 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 14-6-2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, இதுகுறித்துக் கேட்டு, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். 

Tirunelveli CPM Office incident CM explanation in the 

இச்சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; 7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகச் தெரியவந்ததையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூகநீதிக் கொள்கையைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி, சமஉரிமை, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பக்காலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள். நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூகக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இதுபோன்ற இனங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறது. 

Tirunelveli CPM Office incident CM explanation in the 

இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது. அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில்கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருகின்றன” எனப் பேசினார்.

Next Story

கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Additional special buses run!

பௌர்ணமி, மற்றும்  வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பௌர்ணமி நாளான இன்று (21/06/2024), சனிக்கிழமை (22/06/2024) மற்றும் ஞாயிறு (23/06/2024)  ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (21/06/2024) 600 பேருந்துகளும், நாளை (22/06/2024) 410 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Additional special buses run!

அதே சமயம் பெங்களூர். திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 15 பேருந்துகளும், நாளை 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Additional special buses run!

அதோடு ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.