Skip to main content

நீயா? நானா? - ஒரு மாணவிக்காக மோதிக்கொண்ட இரு மாணவர்கள்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Two students fight for one student perambalur

 

பெரம்பலூர் மாவட்டத்தில் பொறியியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் அதிகம் உள்ளது. அப்பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிப்பதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர், ராமநத்தம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் தினசரி பெரம்பலூர் பகுதிக்குச் சென்று படித்து வருகின்றனர். இவர்களைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்காகத் தனியார் கல்லூரி பேருந்துகள் ஏராளம் வந்து செல்கின்றன.

 

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிலையத்தில் கல்லூரி செல்வதற்கு பேருந்துக்காக நின்ற மாணவர்கள் இரு கோஷ்டிகளாக மாறி மோதிக் கொண்டனர். தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை அதே கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் காதலித்துள்ளனர். அதில் காதலியை கரம் பிடிப்பது நீயா? நானா? என்ற போட்டி மாணவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் காரணமாக இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான்  நேற்று இரண்டு தரப்பு மாணவர்கள் ஆறு பேர் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர்  மோதிக் கொண்டுள்ளனர்.

 

இதையடுத்து போலீசார் இரு தரப்பு மாணவர்களுக்கும் அறிவுரை கூறி எச்சரித்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்