
சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வழிப்பறி திருடர்கள் இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம், அழகாபுரம் காட்டூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர், கடந்த ஆண்டு டிச. 31ம் தேதி, சொந்த வேலையாக மிட்டாபுதூர் ஆண்டிச்சி அம்மன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரவுடிகள் இருவர் அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, சிவராஜ் வைத்திருந்த 6500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சேலம் பெரிய புதூரைச் சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார் (27), சிவக்குமார் மகன் மணிகண்டன் என்கிற குள்ளமணி (24) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சம்பவத்தன்றே காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே அடிதடி, திருட்டு சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், திருட்டு, வழிப்பறி குற்றங்கள் தொடர்பாக அழகாபுரம் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பதிவாகி இருப்பது தொடர் விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களில் ரவுடி அஜித்குமார் ஏற்கனவே 6 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாலும் அஜித்குமார், மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் ரவுடிகள் இருவரையும், காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.