/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/162_26.jpg)
சென்னை அருகே உள்ள செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகப் பதவி வகித்து வந்தார். மேலும், இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். செம்மரக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பார்த்திபன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுவந்தார்.
செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு பின் பிணையில் வெளிவந்தவர் பார்திபன். பார்த்திபன், மிளகாய் பொடி வெங்கடேசன், நடராஜன், கணேசன், சுப்பையா இவர்கள் அனைவரும் பெரும் புள்ளிகளாக அப்பகுதியில் வலம் வந்தனர். இவர்களுக்கு எதிராக அருண்பாண்டியன், முத்து சரவணன், முத்து சரவணனின் தம்பி கருப்பு முருகேசன், நாயுடு சதீஷ் என தனியாக ஒரு டீம் இருந்துவருகிறது.பார்த்திபன், கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி காலை தனது வீட்டின் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பார்த்திபனை வழி மறித்தது. மேலும், அவர்கள் கொண்டு வந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு பார்த்திபனை வெட்ட முயற்சித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த பார்த்திபன் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், தப்பிச் சென்ற பார்த்திபனை அந்த மர்ம கும்பல் விடாமல் துரத்திச் சென்று சுற்றி வளைத்தது. பிறகு பார்த்திபனை கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_111.jpg)
இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இது தொடர்பாக இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களைப் பிடிக்க சிறப்பு காவல் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுவந்தனர். தலைமறைவாக இருந்த முத்து சரவணனும், சண்டே சதீஷும் டெல்லியில் பதுங்கியிருப்பதாக தனிப்படைக்கு தகவல் வர, டெல்லி விரைந்த தனிப்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். பிறகு அங்கு இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சோழவரத்திற்கு அழைத்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, சோழவரம் அருகே புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது ரவுடிகள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனை அடுத்து தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த பொழுது காவல்துறைக்கும் முத்து சரவணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது காவல்துறையினர், முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் முத்து சரவணனுக்கு மார்பிலும், சண்டே சதீஷ்க்கு நெற்றியின் ஒரு முனையிலும் குண்டு பாய்ந்தது. இதில் முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே பலியாக சண்டே சதீஷ் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சண்டே சதீஷ் மரணமடைய இருவரது உடலும் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில், கடந்த புதன் கிழமையே முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜ் பாண்டியன், தனது மகனை போலீசார் போலி என்கவுண்டர் செய்யப்போவதாக தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இரு ரவுடிகளுமே தி.மு.க. பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம், வில்லிவாக்கம் வழக்கறிஞர் ராஜேஷ், மற்றும் பாடியநல்லூர் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் பிரபல ரவுடி பாம் சரவணனின் நெருங்கிய கூட்டாளிகள்என்பதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_128.jpg)
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் இரு ரவுடிகள் என்கவுண்டர் நடந்த அதே சமயத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இவர்களின் கூட்டாளியான தனிகா என்ற ரவுடி காயத்துடன் உயிர்தப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் காவல்நிலைய சரித்திர பதிவேடு கொண்ட ஏ பிளஸ் ரவுடியான தணிகா என்கின்ற தணிகாசலம் மீது செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் தனிப்படை போலீசார் தணிகாசலத்தை சென்னையில் கைது செய்து விசாரணைக்காகசெங்கல்பட்டிற்க்கு அழைத்து வந்தனர். அப்படி வரும்போது, மாமண்டூர் அருகே போலீசாரிடமிருந்து ரவுடி தணிகா, தப்ப முயன்றபோது போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் கை மற்றும் கால் ஆகிய பகுதியில் சுட்டு பிடித்தனர். பிறகு அவரை மீட்ட போலீசார் அவரைசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அங்கிருந்து ஏ பிளஸ் ரவுடி தணிகாசலத்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.தணிகாசலத்தின் மீது 6 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி, பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். புழல் சிறையில் சில மாதங்களுக்கு முன்பு தணிகாசலத்திடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)