Skip to main content

தொழில் போட்டி... மக்கள் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள்

 

Two private buses collided with each other Coimbatore

 

கோவையில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகள், தொழில் போட்டியால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பயணிகளை பதைபதைக்க வைத்துள்ளது.

 

தமிழ்நாட்டில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகின்றன. சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக ஏகப்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம், பேருந்து நிலையத்தில் இருக்கும் தனியார் பேருந்துகளில் யார் அதிக பயணிகளை ஏற்றிச்செல்வது; யார் அதிக வேகத்தில் முண்டியடித்துக்கொண்டு செல்வது என தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், பேருந்து ஊழியர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே கிளம்பிய இரண்டு தனியார் பேருந்துகள் தொழில் போட்டி காரணமாக ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு அதிவேகத்துடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த இரண்டு பேருந்துகளும் பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நடுரோட்டில் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த இரண்டு பேருந்துகளில் இருந்த பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அதுமட்டுமின்றி, நடுரோட்டில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதோடு விட்டுவிடாமல், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !