சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற பைக் திருடர்கள் கைது..!

Two person arrested near viluppuram

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் உள்ளிட்ட போலீசார் சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலை சந்திப்பில் நேற்று (30.07.2021) மாலை ஆறுமணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, அந்த இருவரில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனை வெட்ட முயன்றார். மற்றொரு நபர் அந்த இடத்தின் அருகில் இருந்த கடையிலிருந்து சோடா பாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதனைக் கண்ட சக போலீசார் இரு வாலிபர்களையும் சுற்றி வளைத்து, மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் சென்னை ராமாபுரம் லட்சுமி நகரைச் சேர்ந்த அம்பிகாபதி என்பவரது மகன் அரவிந்தன் (வயது 27) என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் நகர் வெங்கட்ராவ் மகன் தேவா (வயது 21) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும், திண்டிவனம் மகாத்மா காந்தி வீதியில் உள்ள ஒருவர் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த யமஹா இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு சென்னை நோக்கி செல்லும்போது போலீசார் வாகன சோதனையில் இருவரையும் மடக்கியுள்ளனர். தங்கள் வாகனம் திருட்டு வாகனம் என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்று இருவரும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்துஇருவரையும் கைதுசெய்த போலீசார், கொலை முயற்சி, திருட்டு வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe