
திருவண்ணாமலை அடுத்த கருத்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மார்ச் 20 ஆம் தேதி பிற்பகல் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதற்காக ஏரியில் மீன் வலையை விரித்துள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான கூலித் தொழிலாளி திருவேங்கடம் என்பவரின் ஆடு மீன் வலையில் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்தவர், ஏரியில் இறங்கி மீன் வலையிலிருந்து ஆட்டை காப்பாற்ற முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக திருவேங்கடம் மீன் வலையில் சிக்கி கூச்சலிட்டார்.
ஏரிக்கு அருகாமையில் செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டிருந்த 40 வயதான ரமேஷ், கதறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக ஏரி பகுதிக்கு விரைந்து சென்ற பொழுது திருவேங்கடம் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கிய ரமேஷ், திருவேங்கடத்துடன் சேர்ந்து வலையில் சிக்கி ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் இருவரின் உடலை தேடினர். நேற்று இரவு திருவேங்கடத்தின் உடலை மீட்ட நிலையில் இன்று மார்ச் 21 ஆம் தேதி அதிகாலை செங்கல் சூளை கூலித் தொழிலாளி ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் மீன் வலையை விரித்தது யார் என விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் அருண், சிவதாஸ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரும் ஏரி கரையில் வீடு கட்டி வாழ்கின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக திருட்டுத் தனமாக ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்வதும், இவர்கள் தான் ஏரியில் வலை விரித்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதனால் மூன்று பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டை காப்பாற்ற சென்று மீன் வலையில் சிக்கி இருவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.