/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_114.jpg)
நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையும் முத்துமாரியம்மன் கோயில் தெற்கு வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி ஈஸ்வரி. 39 வயதான இவர், தனது 15 வயது மகனுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில், இரவு அவர் வீட்டு அருகே உள்ள பெட்டிக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது, கடையின் வாசலில் காத்திருந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் கொடுவாளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் ஆட்டோவில் தப்பித்துச் சென்றுள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவசர எண் நூறுக்குப் புகார் கூறியுள்ளனர். இந்த புகாரின் பேரில், வெளிப்பாளையும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி நள்ளிரவு இறந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஈஸ்வரி கணவரைப் பிரிந்து தனியே தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், அந்தப் பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார். இதனால், கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வட்டித் தொழிலில் எதாவது பகை ஏற்பட்டு எதிரிகள் கொலை செய்துள்ளனரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சம்பவ இடத்தைநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். வீட்டின் அருகே கடைக்கு வந்த பெண்ணை இரண்டு மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)