
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த தட்டாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி மற்றும் சிவகுமார். கூலித்தொழிலாளிகளான இருவரும் அவ்வப்போது சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் இருவரும் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்தினர். பின்னர் வீட்டுக்கு வந்த இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்களது குடும்பத்தினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றனர். இருப்பினும் அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவகுமார் உயிரிழந்தார். தொடர்ந்து முனியாண்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இப்படி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் தஞ்சை மற்றும் மயிலாடுதுறையில் மதுவில் சயனைடு கலந்து அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருச்சியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)