கடந்த 1995ஆம் ஆண்டு முதல் பல்வேறு வெடிகுண்டு மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி என்ற தீவிரவாதிகள் இருவர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக 2011ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரான அத்வானி மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக ரத யாத்திரை செல்லும் பொழுது பாலத்தின் கீழ் வெடிகுண்டு வைத்து அவரை தாக்குவதற்கான முயற்சியும் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் காவல்துறை அப்போதே துரிதமாகச் செயல்பட்டு பைக் வெடிகுண்டைக் கைப்பற்றி இருந்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று கடந்த 2013ஆம் ஆண்டு பா.ஜ.க. அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு, கோவை விரட்டிகால் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என பல்வேறு வழக்குகள் இவர்கள் இருவர் மீதும் உள்ளது. இத்தகைய சூழலில் தான் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் பெங்களூரில் இருப்பது கோவை போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கோவையில் இருந்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றனர். இதனையடுத்து தீவிரவாதிகள் இருவரும் பெங்களூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் பொழுது அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அதன்படி ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கோவை போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னையில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அபூபக்கர் சித்திக் நாகூர் பகுதியைச் சேர்ந்தவர். முகமது அலி திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.