
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே உள்ளது மேல் சிறு வள்ளூர். இந்த ஊரைச் சேர்ந்த 36 வயது தணிகாசலம், 27 வயது கார்த்திக் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். தனிகாசலத்திற்கு புன்னகை என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கார்த்திக், கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இருவரும் நேற்று முன்தினம் (02.08.2021) இரவு ஊருக்கு அருகில் உள்ள மோட்டார் கொட்டகையில் ஒரே துணியில் தூக்கில் பிணமாக தொங்கிய காட்சி அந்த ஊர் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வயல்வெளிக்கு வேலைக்குச் சென்றவர்கள் இவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய காட்சியைப் பார்த்துவிட்டு காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் - இன்ஸ்பெக்டர் திருமேனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், “இருவரும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்லும் நண்பர்கள். இவர்களுடைய நட்பு எல்லை மீறிச் சென்று இருவருக்குள்ளும் ஓரின சேர்க்கை உறவு தொடர்ந்துள்ளது. இது, இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது. அதனால், இருவரையும் கண்டித்துள்ளனர். அப்படியிருந்தும் இவர்கள் நட்பு பிரியவில்லை. இதனால் இவரது மனைவிகள் கோபித்துக்கொண்டு அவரவர் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த இருவரும், ஒரே துணியால் வயல் வெளிப்பகுதியில் உள்ள கொட்டகையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது” என்று தெரிவிக்கின்றனர்.