பைக் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Two passed away in bike accident

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொற்படா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்(55). அதே ஊரைச் சேர்ந்தவர் அவரது நண்பர் சண்முகம். விவசாயிகளான இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

நேற்று கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகில் உள்ள ஒரு கோயிலில் அவர்களது உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு காதணி விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவுக்கு இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலை மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் பள்ளி அருகே அவர்களது இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது, எதிரே திருக்கோவிலூர் அருகில் உள்ள குறிஞ்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், ராஜ்குமார், ஆகிய இருவரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் புத்திரகவுண்டன்பாளையம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தங்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இவர்களது இரண்டு பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று நால்வரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சண்முகம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ரஞ்சித், ராம்குமார் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இறந்துபோன சண்முகத்தின் மாமனார் சுப்பிரமணியனிடம் தனது மருமகன் சண்முகம் விபத்தில் இறந்து போன தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைக்கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார் சுப்பிரமணியம். அவரை எழுப்பி பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். மருமகன் சண்முகம் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் அவரது மாமனார் சுப்ரமணியமும் இறந்து போன சம்பவம் பொற்படா குறிச்சி கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe