Skip to main content

கொடைக்கானல் சென்று விட்டுத் திரும்பும்போது விபத்து இருவர் பலி! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Two Passed away in accident while returning from Kodaikanal

 

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (34). இவர், தனது நண்பர்களான ஏழுமலை (29), கவியரசு( 3), சுரேஷ் (40), காமராஜ் ( 39), கார்த்தி (29), மற்றும் செல்வகுமார் ( 32) உள்ளிட்டோருடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் 7 பேரும் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்று விட்டு, சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். 

 

அவர்கள் வந்த கார் நேற்று நள்ளிரவில் மணப்பாறை அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை மற்றும் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே படுகாயம் அடைந்த ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்த நிலையில் காயமடைந்த 5 பேரும் தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு-வருகிறது இ-பாஸ் நடைமுறை?

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
E-pass to Ooty and Kodaikanal

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும். உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.