
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில், விழுப்புரத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் தடுப்பணையின் இரண்டு மதகுகள் உடைந்துள்ளன. ஏற்கனவே எல்லீஸ் தடுப்பணை உடைப்பு குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இரண்டு மதகுகள் உடைந்துள்ளன.
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 6க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. விழுப்புரம் ஏனாதிமங்கலம் எல்லீஸ் தடுப்பணையிலிருந்த நான்கு கதவுகள் ஏற்கனவே சேதமாகிவந்த நிலையில், நேற்று (19.11.2021) இரவு மேலும் இரண்டு மதகுகள் முழுமையாக உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியானது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிவருகிறது. ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த தடுப்பணையைப் புதுப்பிப்பதற்காக 50 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.