Two men who cheated on two teenagers in two separate incidents

விழுப்புரம் மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபால்வின் ஜெயகுமார் (40). மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணி செய்துவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 வயது இளம்பெண்ணுடன் பழகியுள்ளார். அவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். தற்போது திருமணம் செய்ய மறுத்துள்ளதால் அந்தப் பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து கடந்த மாதம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை ரீதியாக விசாரணை நடத்தி ஒழுக்க முறை தவறு நடந்ததாக ஆசிரியர் ரகுபால்வின் ஜெயக்குமாரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அங்காளமணி (33). இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். பத்தாம் வகுப்புவரை படித்துள்ள இவர், 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளார். இருவருக்குமிடையே காதல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமியை அங்காளமணி கடத்திச் சென்றுள்ளதாக சிறுமியின் தாய் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை செய்து அங்காளமணியையும் அந்த சிறுமியையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அங்காளமணி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதை நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஆகியோர் வழக்குப் பதிவுசெய்து அங்காள மணியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமியை அரசு காப்பகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment