two man incident his friend while drunk in Tirupur

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கருப்புசாமி புதூர். இங்குள்ள அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத அளவில் சிவனடியார் வேடத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அப்போது, இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்திற்குத்தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

Advertisment

இதற்கிடையில், சடலமாக இருந்தவரின் முகம் மற்றும் தலையில் பலத்த ரத்தக் காயம் இருந்துள்ளது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையைத்தொடங்கினர். இந்நிலையில், இறந்து கிடந்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான மதியழகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடிக்கு விரைந்த போலீசார், அவர் தங்கியிருந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

அப்போது, அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குத்தாக்குப் பிடிக்க முடியாத இருவரும், பல்வேறு உண்மைகளைக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட போலீசார் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கொலை செய்யப்பட்ட மதியழகனும் பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதியன்று மதியழகன், பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இரும்புக் கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம், போதையில் இருந்தவர்கள் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, தலைக்கேறிய போதையில் இருந்த மதியழகன் ஸ்ரீமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்தஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் அங்கிருந்த கட்டையால் மதியழகனைச் சரமாரியாகத்தாக்கியுள்ளனர். மேலும், அது போதாதென்று பக்கத்தில் இருந்த கல்லால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், தாங்கள் அடித்ததில் மதியழகன் இறந்துவிட்டதால் ஸ்ரீமுருகனுக்கும் பட்டுப்பாண்டிக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதியழகனின் உடலை என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். அதன்பிறகு, மதியழகனின் உடலை ரெக்சின் கவரால் சுருட்டி டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கருப்புசாமிபுதூர் பகுதிக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, இருவரும் தப்பித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே நேரம், மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.