Two lost in road accident near Vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி(55). இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன்(35), சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இன்று சின்னத்தம்பி பந்தல் அமைப்பதற்காக நாட்றம்பள்ளி செல்வதாக இருந்தது. இவருடன் ராமனும் சென்றுள்ளார். இருவரும் இன்று காலை ஒரே இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி சென்ற போது நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது பின்னால் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் பின்புறமாக வேகமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இந்த விபத்தில் சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார். இரு சக்கர வாகனத்தின் மீது விபத்து ஏற்படுத்திய கார் அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் சின்னத்தம்பியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சின்னத்தம்பியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து சுங்கச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment