
ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் புலாசா மீன் 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றுப்படுகை உள்ளது. கடலும் ஆறும் சங்கமிக்கும் அந்த இடத்தில் அரியவகை மீனான 'புலாசா' எனும் மீன் அரிதிலும் அரிதாக பிடிபடும். மீன்களின் ராஜா என்றழைக்கப்படும் புலாசா மீன் கிடைத்தால் மீனவர்களுக்கு அன்றைக்கு பம்பர் பரிசுதான். அதிக சுவையும் சத்துக்களும் கொண்ட இந்த புலாசா மீனை ஆந்திர மக்கள் விரும்பி உண்ணும் நிலையில், எந்தவிலை கொடுத்தேனும் இந்த மீனை வாங்க போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இந்த மீனுக்காக போட்டிபோடுவார்கள். இதை பலர் வாங்கி அன்பானவர்களுக்கு பரிசாகக் கூட வழங்குவார்கள்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரண்டு புலாசா மீன்கள் பிடிபட்டது. இரண்டு கிலோ எடை கொண்ட ஒரு புலாசா மீன் 25 ஆயிரம் ரூபாய்க்கும், மற்றொரு மீன் 23 ஆயிரத்திற்கும் என மொத்தம் 48 ஆயிரத்திற்கு ஏலம் போனது. ஏனாம் பகுதியை சேர்ந்த கொல்லு நாகலட்சுமி என்பவர் இந்த இரண்டு மீன்களையும் ஏலம் எடுத்துள்ளார். இந்த வகை மீன்கள் பெரும்பாலும் பிடிக்கப்படும் ஆற்றின் கரையிலேயே விற்பனை செய்யப்படும். பிரான்ஸ் நாட்டு மக்களும் இந்த ரக மீன்களை விரும்பி உண்பதாக சொல்கிறார்கள்.