/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4197.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையை ஒட்டி உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த 28 வயதுடையபெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏழு மற்றும் ஆறு வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. சுரேஷின் மனைவி கோபித்துக் கொண்டு, கணவன் வீட்டிலேயே தன் குழந்தைகளை விட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு சுரேஷ் சிறிது காலம் குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். சுரேஷ்தான் குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று சுரேஷின் தாய் மலர், தந்தை பழனி ஆகிய இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். சுரேஷ் மற்றும் அவரது குழந்தைகள் மூவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். வேலைக்கு சென்ற பழனியும், மலரும் மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டில் சுரேஷின் இரண்டு குழந்தைகளும் கட்டிலில் பிணமாக கிடந்துள்ளனர். சுரேஷை காணவில்லை. இது குறித்து உடனடியாக அவர்கள், கச்சராபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலை அடுத்து சம்பவம் நடந்து வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் தந்தை, மனைவி பிரிந்த கோபத்தில் இரண்டு குழந்தைகளின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பிறகு மனம் மாறி அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)