
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள டொக்குவீரன்பட்டியில் உள்ள தாத்தாகவுண்டன் பாறை குளத்தில் நீச்சல் பழகச் சென்ற பள்ளி சிறுவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சாலை தெருவைச் சேர்ந்த அப்பாஸ் என்பவருடைய மகன் ரசாக் (11). இவர் ஐந்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார். கொல்லம்பட்டறையைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் குமார் (12). இவர் ஆறாம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவர்கள் இருவரும் நீச்சல் பழகுவதற்காக தாத்தாகவுண்டன் பாறை குளத்திற்கு வந்ததாக தெரிகிறது. அப்படி வந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இத்தகவலை அடுத்து, நேற்று (10.08.2021) இரவு 9 மணிக்கு வந்த வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 2 மணிவரை தேடியும் உடல்கள் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர். மீண்டும் புதன்கிழமையான இன்று காலை சிறுவர்களின் உடலைத் தேடும் பணி நடைபெற்றது. வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ், இன்ஸ்பெக்டர் முருகன், கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சேசுராஜாங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து சிறுவர்களை மீட்கும் பணியைப் பார்வையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் கண்ணா தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட வேடசந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் கல் குவாரியில் இறங்கி காலை 7 மணிமுதல் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காலை 9.30 மணி அளவில் இருவரின் உடல்களையும் மீட்ட தீயணைப்புத் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.