
திருச்சி மாவட்டம், ஆழ்வார்தோப்பு பகுதியிலிருந்து தில்லை நகர் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், “சின்னச்சாமி நகரில் இரண்டு பேர் பயங்கரமாக மோதிக்கொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இத்தகவலை அடுத்து தில்லை நகர் காவல்துறையினர், ஆழ்வார்தோப்பு பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு சென்ற காவலர்கள் அங்கு நடந்த சண்டைக் காட்சியைப் பார்த்து மிரண்டுபோயினர். காரணம், 2 சிறுவர்கள் காவலர்கள் வந்ததுகூட தெரியாமல் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இருவரையும் விலக்கிவிட்ட காவல்துறையினர், அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இரண்டு சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பப்ஜி விளையாட்டில் சொன்னதைக் கேட்காததால் தோல்வியைச் சந்தித்ததின் விளைவாக இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்றது தெரியவந்தது. இதனைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ந்துபோயினர். இருவரும் சிறுவர்கள் என்பதால் காவல்துறையினர் அவர்களுக்குப் புத்தி சொல்லி, எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பினர்.