/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iit_0.jpg)
ஐ ஐ டி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஐ.டி. என்.ஐ.டி. போன்ற மத்திய அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வில் எட்டு கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த லட்சுமி ஸ்ரீ என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், எந்த முறையில் விடையளித்திருந்தாலும் மதிப்பெண் வழங்குவது என்ற கான்பூர் ஐ ஐ டி அறிவிப்பு செல்லும் என உத்தரவிட்டார். ஆனால், இரு இலக்க தசம எண்களை விடையாக அளித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், நுழைவுத்தேர்வு வினாத்தாள்களை மறுமதிப்பீடு செய்து, ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் 1.52 லட்சம் விடைத்தாள்கள் மறு மதிப்பீடு செய்ய ஆறு மாதமாகும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என கூறி, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை கோரி கான்பூர் ஐ ஐ டி பதிவாளர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு, விடைத்தாள்கள் திருத்த பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தேவையற்றது எனக் கூறி, ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)