Skip to main content

ஆன்லைன் சூதாட்டத்திற்காக திருட்டில் ஈடுபட்ட இருவர்! 

Published on 07/08/2022 | Edited on 08/08/2022

 

tth

 

ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பலர் தங்கள் பணத்தை இழந்து வருகிறார்கள். அதோடு பலரிடம் கடன் வாங்கி அந்த சூதாட்டத்தில் இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்போது இந்த சூதாட்டத்திற்காக திருட்டு சம்பவம் நடந்துள்ளது. 

 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகில் உள்ள ராவுத்தன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன்(53). இவர், கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு தனக்கு சொந்தமான விவசாய டிராக்டரை அதே பகுதியில் உள்ள அவரது கடைக்கு முன்புறம் நிறுத்தி இருந்தார். மறுநாள் எழுந்து பார்த்த போது, டிராக்டர் காணவில்லை. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடு போன டிராக்டரை தேடி வந்தனர். 

 

இந்த நிலையில், கண்ணனின் விவசாய டிராக்டர் மரக்காணம் பகுதியில் உள்ள அனுமந்தை கிராமத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், அந்தப் பகுதிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி, இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம் அரங்கனூரை சேர்ந்த ராஜி(31) என்பது, அவரின் 18 வயது நண்பர் ஒருவர் என்பதும் தெரியவந்தது. 

 

மேலும், இவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி நிறைய பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் விளையாட பணமின்றி இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திருடிய வாகனத்தை யாரும் கண்டுபிடிக்காத வகையில் பெயிண்ட் அடித்து நிறமாற்றம் செய்துள்ளனர். மேலும், அதனை ஒரு தனியார் ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். அதனையடுத்து இருவரையும் கைது செய்துள்ளனர். அதோடு திருடி சென்ற டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்