Advertisment

இணைபிரியா நண்பர்கள் விபத்தில் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..

Two friends passes away in accident near thittakudi

Advertisment

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செங்கமேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரவீன், வயது 15 அதே ஊரைச் சேர்ந்தவர் இங்கர்சால். இவரது மகன் சூர்யா, வயது 15. இவர்கள் இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்கள். இருவரும் இணைபிரியாத நண்பர்கள். இந்த நிலையில், நேற்று (22.02.2021) சூர்யாவுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதனை அவர்கள், தங்கள் ஊரில் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளனர். இதற்காக பெண்ணாடத்தைச் சேர்ந்த சூர்யாவின் நண்பர் ஒருவர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக செங்கமேடு வந்துள்ளார்.

பிறந்தநாள் நிகழ்ச்சியை நண்பர்களுடன் முடித்துகொண்டு, பெண்ணாடத்தில் இருந்து வந்திருந்த நண்பரை பெண்ணாடம் வரை கொண்டு சென்று விட்டுவிட்டு சூர்யாவும் பிரவீனும் மீண்டும் தங்கள் ஊரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, கூடலூர் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியது. அதில் பிரவீன், சூர்யா இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில், சூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சிலமணி நேரங்களிலேயே பிரவீன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யாவின் உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குப்பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இரு மாணவர்களின் உடல்களையும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சாலை விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த ஆவினங்குடி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment

ஒரே ஊரைச் சேர்ந்த இரு மாணவர்கள் விபத்தில் மரணமடைந்த சம்பவம் செங்கமேடு கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன மாணவர்கள் உடலைப் பார்த்து அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுத காட்சி பார்ப்போரைக் கண்கலங்க வைத்தது.

thittakkudi Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe