/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_99.jpg)
ஈரோடு மாவட்டம் சிவகிரி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது அருண்குமார் கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அதேபோல் சிவகிரி திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மணிகண்டன். இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்த நிலையில், 2 ஆம் தேதி இரவு அருண்குமார், மணிகண்டன் இருவரும் சிவகிரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடுமுடிக்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்காட்டுவலசு என்ற பகுதியில் வரும்போது அவர்களது மோட்டார் சைக்கிள் சாலையில் கிடந்த கற்களின் மேல் ஏறி சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரில்பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருண்குமார் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண்குமாரும் இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். அதே போல், விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் உடலையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் இருவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)