/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_24.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது பாலிகிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருடைய 8 வயது மகள் சமீரா, 6 வயது மகன் யோகேஷ் ஆகிய இருவரும் நேற்று மதியம் அந்த கிராமத்தின் அருகில் உள்ள சிவன் கோவில் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
இவர்களுக்கு நீச்சல் தெரியாததால் கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இரண்டு சிறு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீண்ட நேரமாக இரு பிள்ளைகளை காணாமல் தவித்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது குளத்திற்கு குளிக்கச் சென்ற தகவல் தெரிந்து, அங்கு தேடிச் சென்று பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சென்ற ஊர் மக்களும், குளத்தில் மூழ்கி இறந்த இரண்டு குழந்தைகளையைும் வெளியே எடுத்து வந்துள்ளனர். அவர்களது உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து எடைக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று ஊர் மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இதே குளத்தில் ஏற்கனவே குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. எனவே குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்தால் இளம் பிஞ்சுகளின் உயிர் இழப்பைத் தடுக்கலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)