Two arrested wild animals case in ramanatham village

கடலூர் மாவட்டம், ராமநத்தம் காவல்நிலையம் பகுதியில் உள்ளது டி.ஏந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இந்த மான்களை மர்ம நபர்கள், இரவு நேரங்களில் வேட்டையாடி வருவதாக ராமநத்தம் காவல்நிலையப் போலீசாருக்கு அவ்வப்போது தகவல் வந்தவண்ணம் இருந்துள்ளது.

Advertisment

இதன் காரணமாக ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு வந்துள்ளனர். நேற்று மதியம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ஏந்தல் கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு மூட்டையுடன் ஒரு நபர் நடமாடியுள்ளார்.

Advertisment

அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறி உள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையைச் சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் பையில் மாமிசகரித்துண்டுகள் இருந்தன. உடனே போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த அப்பாவு மகன் ராமசாமி என்பதும் அவர் வைத்திருந்த சாக்குப் பையில் மான் கறி இருந்ததும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், பெண்ணாடம் நரிக்குறவர் காலனி பதவியைச் சேர்ந்த ராஜி மகன் பிரபு என்பவர் தன்னிடம் மான் கறியைக் கொடுத்து விற்கச் சொன்னதாகக் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், பெண்ணாடம் நரிக்குறவர் காலனிக்குச் சென்று பாபுவையும் கைதுசெய்தனர். பிறகு இருவரையும் கைதுசெய்த ராமநத்தம் போலீசார், வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, வனத்துறை அதிகாரி ரவியிடம் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரிடமிருந்து 10 கிலோ மான்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.