ராமநாதபுரத்தில் பழுதை நீக்க கொடுத்த செல்போனில் இருந்த அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை திருடி வெளியில் விடாமல் இருக்க பணம்கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் ரெகுநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பழுதடைந்த தனது மொபைல்போனை செல்போன் கடை ஒன்றில் பழுதுநீக்க கொடுத்துள்ளார். அந்த மொபைல் போனை பெற்றுக்கொண்ட நபர்கள் சரி செய்து இரண்டுநாட்களில் தருவதாக கூறியதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு அதேபோல் போன் பழுதுநீக்கப்பட்டு பெண்ணிடம் ஒப்படைக்கபட்டது. ஆனால் பழுது நீக்கும் பொழுது அந்த மொபைலில் அந்த பெண்ணின் புகைப்படங்கள், அவர் வெளிநாட்டில் உள்ள தனது கணவருடன் பேசிய வீடியோக்கள், புகைப்படங்கள் என எல்லாவற்றையும் திருடியுள்ளனர்.

இதன்பின் இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் உனது புகைப்படங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. எல்லாவற்றையும் இன்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவோம் வெளியிட வேண்டாம் எனில் 5 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் குழம்பிப்போன அந்த பெண் மனஉளைச்சலில் இருந்துள்ளார். ஒருக்கட்டத்தில் இதை தனது மாமியார், மாமனாரிடம் அந்த பெண் கூற, உச்சிப்புள்ளி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளிக்க மாமனாருடன் சென்றுள்ளார் அந்த பெண். காவல்நிலையத்தில் அந்த பெண் புகாரளிக்க நின்று கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. நாளை ஒரு நாள்தான் டைம் இல்லையெனில் இன்டர்நெட்டில் எல்லாம் வெளியாகும் எனக்கூற, ஆனால் தன்னிடம் பணம் இல்லை என அங்கேயே அழுது புலம்பியுள்ளார் அந்த பெண்.
அடுத்த முறை அழைப்பு வந்தால் பணம் தருவதாக கூறும்படி போலீசார் அறிவுறுத்திய நிலையில் அதேபோல் இரண்டு மணி நேரம் கழித்து அழைப்பு வர, தன் நகைகளை அடகு வைத்து பணம் தருவதாக அந்த பெண் அந்த நபரிடம் கூறியுள்ளார். நாளை ராமநாதபுரம் டி பிளாக் பஸ் ஸ்டாப் அருகே வந்தால் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் அடுத்தநாள் டி பிளாக் பஸ் ஸ்டாப் அருகே மறைமுகமாக உச்சிப்புள்ளி காவல்நிலைய காவல் ஆய்வாளர் முத்துபிரேம்சந்த், எஸ்ஐ வசந்தகுமார், தலைமைக்காவலர் மருது ஆகியோர் மறைத்திருக்க அந்த பெண்ணுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. போனில் பேசிய அந்த நபர் அங்கு சிசிடிவி கேமரா உள்ளது எனவே கலக்டெர் அலுவலகம் நோக்கி வா என கூறியுள்ளான். அதனையடுத்து அங்கு சென்ற பெண்ணிடம் அந்த நபர் நேரில் பணம் பெற வந்த நிலையில் அவனை தலைமைக்காவலர் மருது மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபர் ராமநாதபுரம் சுண்ணாம்புக்காரத்தெருவை சேர்ந்த சோமசுந்தரம் என தெரியவந்தது. மேலும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு ஒன்றும் தெரியாது ரெகுநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ், சூரியகுமார் ஆகியோர் பணம் தருவார்கள் வாங்கிவா என கூறினர் என கூறியுள்ளான்.
அவர்களுக்கு போன் செய்து பணத்தை வாங்கிவிட்டதாகவும், பணத்தை வாங்கிக்கொள்ள பெரியப்பட்டினம் விலக்கு ரோட்டிற்கு வரவேண்டும் என கூறும்படி சோமசுந்தரத்திடம் போலீசார் தெரிவிக்க அதேபோல் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த சூர்யகுமாரை போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.