
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்துள்ள ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் ரவி(47). இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ரவியிடம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கார்கூடலைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் மணிகண்டன் (எ) கதிரேசன்(23), புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டுமென்று வாடகைக்குப் பேசி ரவியை அழைத்துச் சென்றார். கடலூர் அருகே சென்றபோது இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் இரண்டு பேரும் சாப்பிட்டனர்.
பின்னர் மணிகண்டன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். ரவி மட்டும் தாமதமாக சாப்பிட்டார். இதனால் தான் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் ரவிக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்துவிட்டு, “நான் காரில் காத்திருக்கிறேன், அதனால் உனது கார் சாவியையும், யூடியூப் பார்க்க உனது செல்ஃபோனையும் கொடு” என்று பேசி வாங்கினார். இதை நம்பிய ரவி, மணிகண்டனிடம் சாவியையும் செல்ஃபோனையும் கொடுத்து அனுப்பினார். பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தபோது காரையும் அவரையும் காணவில்லை. அதன் பிறகுதான் அவர் தனது காரை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவி, இதுபற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மேற்பார்வையில் திருப்பாப்புலியூர் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டன் காருடன் நேற்று (08.02.2021) மதியம் சேத்தியாத்தோப்பு பகுதியில் வலம் வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது அவருடன் அவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெருமாத்தூர் காமராஜ் என்பவரின் மகன் அஜித்குமார்(24) என்பவரும் உடன் இருந்துள்ளார். அதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திட்டமிட்டுக் காரைத் திருடியது தெரியவந்தது. அதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் 2 பேர் மீதும் பரங்கிப்பேட்டை, குன்னம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நூதன முறையில் கார் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.