Skip to main content

அடைக்கலம் என்ற பெயரில் சிறுமியை வன்கொடுமை செய்த இருவர் கைது! போக்சோ சட்டம் பாய்ந்தது!!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

Two arrested in salem under pocso act

 

சேலத்தில், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு திக்குத்தெரியாமல் தடுமாறிய சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, இருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 10ஆம் தேதி, பெற்றோர் திட்டியதால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். 

 

அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாவலராக (செக்யூரிட்டி கார்டு) பணியாற்றிவந்த சேகர் (55) என்பவர், சிறுமியிடம் விசாரித்துள்ளார். அந்தச் சிறுமி, தான் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டதால் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், ஆனால் எங்கு செல்வது என்றே தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

 

இதையடுத்து சேகர், அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலேயே படுத்துக்கொள்ளுமாறு சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இரவு நேரத்தில் பாதுகாவலர் சேகர், சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். 

 

அவரிடமிருந்து தப்பித்து இரவு முழுவதும் சுற்றித்திரிந்த சிறுமி, மறுநாள் காலை அழகாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது, சின்ன மாவீரன் (26) என்ற வாலிபர், தனது மோட்டார் சைக்கிளில் லிஃப்ட் தருவதாக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்திற்குக் கடத்திச்சென்று சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். 

 

அந்த வாலிபரிடமிருந்தும் தப்பித்த சிறுமி, ஒருவழியாக பெற்றோரைத் தேடி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறிக் கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

அதன்பேரில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சேகர், சின்ன மாவீரன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, அவர்களைக் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்