
திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் குழு மாற்று உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளை இரண்டு பேர் எடுத்துச் சென்றதைப் பார்த்த காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர்.
ஆனால் இருசக்கர வாகனத்துடன் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு அந்த இருவரும் தப்பி ஓடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மூட்டைகளில் இருந்த 5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த், மணிகண்டன் என்பது தெரிய வந்தது. அவருடன் தப்பி ஓடிய மற்றொருவர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரசாந்த், மணிகண்டன் மீது ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 3 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.