Skip to main content

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி முத்திரை தயாரித்து நகை, பணம் மோசடி செய்த  இருவர் கைது! 

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Two arrested for making fake stamps and swindling jewelery and money claiming that the they will arrange government jobs!

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் மாயமணி(34) என்பவருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த வரக்கால்பட்டை சேர்ந்த அருள் மகன் பிரபு(30) மற்றும் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வந்த விருத்தாசலம்  நாச்சியார்பேட்டையை சேர்ந்த மணி என்பவருடைய மனைவியான மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி(46) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

 

அந்த பழக்கத்தின் அடிப்படையில் லட்சுமியும், பிரபுவும், 'நாங்கள் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளோம். உங்களுக்கும் வேலை வாங்கித் தர வேண்டுமா?' என மாயமணியிடம் கேட்டுள்ளனர். அதற்கு மாயமணி தனக்கு அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுக்கும்படி கூறியுள்ளார்.  வேலை வாங்கிக் கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூபாய் 3 லட்சம் தர வேண்டுமென பிரபுவும்,  லட்சுமியும் கேட்டுள்ளனர். 

 

அதற்கு, பணம் இல்லை என கூறிய  மாயமணி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்து லட்சுமியிடம் கொடுத்து அதனை ரூ.3 லட்சத்திற்கு அடகு வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி லட்சுமி, மாயமணி கொடுத்த நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

 

Two arrested for making fake stamps and swindling jewelery and money claiming that the they will arrange government jobs!


இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியும், பிரபுவும் மாயமணியிடம் உங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் உதவியாளர் வேலை கிடைத்துள்ளது என்று கூறி அதற்கான ஆணையை கொடுத்துள்ளனர். அந்த ஆணையை பெற்றுக்கொண்ட மாயமணி, கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஆணையை கொடுத்தார். ஆணையைப் பெற்ற அதிகாரி அது போலியானது என்பதை அறிந்து உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் மாயமணியிடம் விசாரணை நடத்தினர். 

 

விசாரணையில் மாயமணிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு லட்சுமியும், பிரபுவும் போலி முத்திரைகளை பயன்படுத்தி வேலைக்கான ஆணையை தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது. 

 

மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  புகார் சென்றதையடுத்து அவரது உத்தரவின்பேரில்  வழக்குப்பதிவு செய்து லட்சுமி, பிரபு இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் மற்றும் போலி முத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

 

Two arrested for making fake stamps and swindling jewelery and money claiming that the they will arrange government jobs!


  
இந்நிலையில் லட்சுமி, பிரபு ஆகியோர் வேலை கேட்டு வருபவர்களிடம் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மேலும் யார் யாரிடம் இதுபோன்று வேலைக்காக பணம் வாங்கி உள்ளனர் என்பது குறித்தும், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அரசு வேலை வாங்கிக் கொடுக்க ஐபிஎல் வீரரிடம் பேரம்" - முதல்வர் குற்றச்சாட்டு

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

punjab chief minister bagavath singh maan press meet ipl cricketer issue

 

அரசு வேலை வாங்கிக் கொடுக்க ஐபிஎல் வீரரிடம் பேரம் பேசப்பட்டதாக பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான்  குற்றம்சாட்டியுள்ளார்.

 

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது அவர் பேசுகையில், "விளையாட்டு வீரர் ஜாஸ் இந்தர் சிங் ஐபிஎல் அணியின் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அவர் பிளேயிங் 11 இல் இல்லை. பஞ்சாப் பவனில் ஜாஸ் இந்தர் சிங்கும் அவரது தந்தையும் அப்போதைய முதல்வர் சன்னியை சந்தித்தனர். அப்போது சரண்ஜித் சிங் சன்னி, அவர்களின் வேலை முடியும் என்றும் தனது மருமகன் ஜஷானை சந்திக்குமாறும் கூறியுள்ளார்.

 

இவ்வாறு கூறிய நிலையில் கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்றிருந்த போது கிரிக்கெட் வீரர் என்னை சந்தித்தார். அப்போது அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன் அந்த வேலையை வாங்கிக் கொடுப்பதற்கு ஜஷான் 2 கோடி ரூபாய் கேட்டதாக என்னிடம் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சரண்ஜித் சிங் உரிய பதிலளிக்கவில்லை எனில் மேலும் பல ஆதாரங்களை வெளியிடுவேன். விளையாட்டுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் பேசி ஜாஸ் இந்தர் சிங்கின் அரசு பணிக்கான ஏற்பாடுகளை செய்வோம். மேலும் ஜாஸ் இந்தர் சிங்க்கு உரிய உரிமைகளை வழங்குவோம். இந்த சம்பவத்திற்கு சரண்ஜித் சிங் சன்னி மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பின் போது அவருடன் ஐபிஎல் வீரர் ஜாஸ் இந்தர் சிங் மற்றும் அவரது தந்தை மஞ்சிந்தர் சிங் ஆகியோரை உடன் அழைத்து வந்திருந்தார். மேலும், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னியுடன் மஞ்சிந்தர் சிங் இருக்கும் படங்களையும் முதல்வர் காட்டினார். 

 

 

Next Story

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; விருதுநகர் மாவட்ட பாஜக தலைவர் கைது 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

virudhunagar west district bjp chief government job related incident 
சுரேஷ்குமார் - கலையரசன்

 

விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரும், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கலையரசனும் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரும் சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம், அவருடைய மகன்களான கார்த்திக் மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2017ல் ரூ.11 லட்சம் பெற்றனர்.  கடந்த 5 வருடங்களாக வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்தனர்.

 

இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பாண்டியன் முறையிட,  ரூ.2 லட்சம் வீதம் 5 காசோலைகளும், ரூ.1 லட்சத்துக்கு ஒரு  காசோலையும் பாண்டியனிடம் தந்தனர். அதில் ஒரு காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ரூ.2 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். மற்ற  காசோலைகள் வங்கியிலிருந்து திரும்பியதால், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம்  பாண்டியன் புகாரளித்திருந்தார். அவரது புகாரில் பா.ஜ.க. மாநில பொதுச்  செயலாளர் ராம ஸ்ரீனிவாசனின் பெயரும் இருந்தது.

 

இதுகுறித்து நாம் ராம ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, “நான் ரயில்வேயில் எந்த பொறுப்பிலும் இல்லை. ரயில்வே அதிகாரிகள் எதற்காக என்னை சிவகாசி பெல் ஹோட்டலுக்கு வந்து பார்க்க வேண்டும். அவர்களிடம் பாண்டியன் பணம் கொடுத்த விபரம் எனக்கு தெரியாது. என் மீதான பொய்யான குற்றச்சாட்டு இது.” என்று  மறுத்தார். 15-12-2022 அன்று கலையரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். சுரேஷ்குமாருக்கு ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றம், ரூ.5,50,000 ரொக்க ஜாமீன் செலுத்துமாறு அறிவுறுத்தியது. ரொக்க ஜாமீன் செலுத்துவதற்கான காலக்கெடு மே 12 ஆம் தேதி முடிந்தும், அத்தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பா.ஜ.க.வில் யாரோ ஒரு முக்கிய தலைவர் ஏதோ ஒரு காரணத்துக்காக  சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து ஆதரவாகச் செயல்படுகிறார் எனச் சந்தேகம் கிளப்பும் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வினர், மோசடி விவகாரம் வெளிப்பட்டு 5 மாதங்கள் கடந்தும்,  சுரேஷ்குமார் கைதாகியும் கூட, அவரை விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து இன்னும் நீக்கவில்லையே என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.