ADVERTISEMENT

அண்ணாமலைநகர் பகுதியில் இரண்டு ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

05:40 PM May 23, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கடலூர் அண்ணாமலை நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அக்கறை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் செல்வம் (எ) செந்தமிழ்ச்செல்வன் (32) மற்றும் அண்ணாமலைநகர் மெயின்ரோட்டை சேர்ந்த சக்திவேல் மகன் பாபு (எ) மர்டர்பாபு (37), இருவரும் கடந்த மார்ச்18- ஆம் தேதி காலை சிவபுரி அருகே சிதம்பரம் கீழவீதியை சேர்ந்த ஜெயராமன் மகன் கண்ணன் என்பவரை இரண்டு சக்கர வாகனத்தில் வந்தபோது வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயின், பணம் ரூ 2500/- பறித்துச் சென்றனர். இது சம்பந்தமாக கண்ணன் என்பவர் கொடுத்த புகார் மனு மீது அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT


இந்த வழக்கு தொடர்பாக அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் விசாரணை மேற்கொண்டு, இருவரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். பாபு ( எ) மர்டர்பாபு மீது அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு , கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதற்கான வழக்கு ஒன்று நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் இவர் மீது அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் ரவுடி பதிவேடும் பராமரிக்கபட்டு வருகிறது.

செல்வம் (எ) செந்தமிழ்ச்செல்வன் மீது கடந்த 2019ஆம் ஆண்டு அண்ணாமலைநகர் வரகூர் பேட்டை கிராமத்தில் ஒரு மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் மளிகை கடை உரிமையாளரை மிரட்டிய வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றசெயல் செய்து வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் ஒரு வருடத்திற்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதின் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT